ஓடும் ரயிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிக்கெட் பரிசோதகரை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக ஒரு குடும்பம் கோவை சென்று விட்டு நேற்று சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தது. அந்த ரயிலில் போத்தனூரை சேர்ந்த அனிஷ்குமார்(26) என்ற டிக்கெட் பரிசோதகர், அந்தக் குடும்பத்தினரின் டிக்கெட்களை பரிசோதித்து சீட்டுகளை சரிபார்த்துக் கொடுத்தார். அப்போது, அந்தப் பெட்டியில் இருந்த சிறுமி, கலகலவென்று பேசுவதைப் பார்த்து, சிறுமியிடம் விளையாட்டாகப் பேசிவிட்டு அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார் அனீஷ்.
பின்னர், அதிகாலை ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது அனீஷ் குமார் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமி கத்தி அழவே, வாயைப் பொத்தியுள்ளார் அனீஷ். ஆனால் சிறுமி மேலும் கூக்குரலிடவே பயணிகள் எழுந்து ஓடி வந்து விசாரித்துள்ளனர். அப்போது அனீஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. அந்தச் சிறுமியும் தனது பெற்றோரிடம் இது குறித்துக் கூறியுள்ளார்.
இதை அடுத்து, அந்த டிக்கெட் பரிசோதகரை பிடித்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுக்க, ஜோலார்பேட்டையில் தயாராக இருந்த ரயில்வே போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனீஷ் குமாருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.




