
இந்திய பொருளாதாரத்தின் நிலை 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது என்று ப. சிதம்பரம் கிண்டல் செய்திருந்ததற்கு நக்கல் அடித்துள்ளார் ஹெச். ராஜா. அதன்படி, தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சர் ஆனதைத்தான் அப்படிச் சொல்கிறார் போலும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவர் இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திரு. ப.சி அவர்கள் பொருளாதாரத்தின் 3 வீல் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளது தன் குடும்ப பொருளாதாரம் பற்றியதோ? ஏனெனில் ப.சி, கார்த்திக் சிதம்பரம், நளினி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் உள்ளதால் 3, வீல் பஞ்சர் என்று உணர்கிறார் போலும்!” என்று கூறியுள்ளார்.
திரு. ப.சி அவர்கள் பொருளாதாரத்தின் 3 வீல் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளது தன் குடும்ப பொருளாதாரம் பற்றியதோ? ஏனெனில் ப.சி, கார்த்திக் சிதம்பரம், நளினி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் உள்ளதால் 3, வீல் பஞ்சர் என்று உணர்கிறார் போலும்
— H Raja (@HRajaBJP) June 5, 2018
முன்னதாக, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விமர்சித்திருந்தார். மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியபோது, தனியார் துறையின் முதலீடு, தனியார் துறையின் நுகர்வு, ஏற்றுமதிகள், அரசு செலவீனங்கள் ஆகியவையே, பொருளாதார வளர்ச்சியின் 4 இயந்திரங்கள் ஆகும். அவை ஒரு காரிலுள்ள 4 டயர்கள் போன்றவை. காரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு டயர்கள் பஞ்சரானால், காரின் வேகம் குறையும். ஆனால், நமது நாட்டின் பொருளாதார நிலையோ 3 டயர்களும் பஞ்சரான காரின் நிலை போல் உள்ளது.
சுகாதாரத் துறையிலும் மேலும் சில கட்டமைப்பிலும்தான் அரசு நிதியை செலவு செய்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை மீது மத்திய அரசு தொடர்ந்து வரி விதித்தபடியே இருக்கிறது. இத்தகைய வரிகள் வாயிலாக மக்களிடம் இருந்து பணத்தை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
மின்சாரத் துறையில் அண்மைக் காலத்தில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டதா? உதாரணமாக, திவாலான 10 முக்கிய நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் உருக்கு நிறுவனங்கள் ஆகும். அப்படியிருக்கையில், அந்தத் துறையில் எப்படி முதலீடு நடைபெறும்?
முத்ரா திட்டத்தின்கீழ் நபர் ஒருவருக்கு ரூ.43 ஆயிரம் மட்டும்தான் கடன் உதவி அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான தொகையைக் கொண்டு எந்தத் தொழிலும் முதலீடு செய்ய முடியாது. பக்கோடா தொழிலில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று பேசியிருந்தார் ப.சிதம்பரம்.
இந்நிலையில் குடும்பத்தின் முக்கிய மூன்று உறுப்பினர்களான ப.சிதம்பரம், அவர் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் முடங்கியிருப்பதால், சிதம்பரம் தன் குடும்பத்தை நினைத்து நாட்டுக்கு அதை ஏற்றிச் சொல்லியிருக்கிறார் என்று நக்கல் அடித்துள்ளார் ஹெச்.ராஜா.




