சென்னை: நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி காந்த்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும், காவிரி பிரச்னைக்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நடிகர் கமல் சந்தித்து பேசியதில் தவறு ஒன்றும் இல்லை; இது ஆரோக்கியமான ஒன்று என்று குறிப்பிட்ட ரஜினி, காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2016-2017ஆம் கல்வியாண்டில் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த அவர், பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் ஆனால் நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்களே பெற்றிருந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார் பிரதீபா.




