தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரம் என்னைப் பேசவிடுங்கள் சிரிக்காதீர்கள் என்று செல்லூர் ராஜூ அவையில் மேலும் மேலும் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
வெளிநடப்பு செய்து சபையை விட்டு வெளிவந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி நேரமில்லா நேரத்தில் பேச முன்கூட்டியே அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவைத்தலைவர் தனபால், இது குறித்துப் பேச அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து அவையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்று கூறினார்.
முன்னதாக, இன்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு, பேசுவதற்காக எழுந்த போது, திமுக உறுப்பினர்கள் அவரை பார்த்து சிரிக்க தொடங்கினார்கள். இதனால் அவையில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரிசையாக சிரிக்க தொடங்கினார்கள். இதை அடுத்து அவர், ”என்னை கொஞ்சம் பேச விடுங்க, சிரிச்சிக்கிட்டே இருக்காதீங்க?” என்று கோபமாகப் பேசுவது போல் பேசினார்.
ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் இப்படி சபையில் பேச விடமாட்டேன்றாங்க என்று அவைக்கு உள்ளும் வெளியும் குற்றம் சாட்டிக் கொள்வது மேலும் மேலும் சிரிப்பலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.




