மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை – சேலம் 8 வழிச் சாலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் இந்த சாலை செல்லும் மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 26ந் தேதி இந்த பகுதி மக்கள் வீடுகளிலும், வயல்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ., பி. டில்லிபாபு உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது பொதுமக்கள் முன்னிலையில், மூர்க்கத்தனமாகவும், அநாகரீகமாகவும், அடித்து இழுத்துச் சென்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டில்லிபாபுவை இழிவுபடுத்தி, மூர்க்கத்தனமாக செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தாக்கியுள்ளார். அவரிடமிருந்த அலைபேசியைப் பறித்து சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கையை தட்டிக்கேட்ட தோழர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்றும், சட்டத்தின்படி உரிய தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 30, 2018 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




