நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் அருகே இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது135 ஆண்டுகள் பழமையான மதுரா கோட்ஸ் ஆலை. இங்கே உள்ள சாயப்பட்டறை கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசு பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுட்டுப்பாட்டு வாரியம் நேற்று இரவு முதல் ஆலையை இயக்க தடை விதித்தது. மேலும் ஆலையில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் மூலம் ஆலையை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
1880இல், தூத்துக்குடி, மதுரை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் மதுரா கோட்ஸ் ஆலை தொடங்கப் பட்டது. இங்கே உலகத்தரம் வாய்ந்த துணிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 16,000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த தொழிற்சாலைகளில் தற்போது 4000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் இந்த ஆலைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆறு பெரும் மாசு அடைந்து வரும் நிலையில், ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கக் கூடாது என்று பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த ஆலைக்கு தடை விதித்துள்ளதாக தொழிற்சங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என ஆலை நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு ஆலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளனர்.




