
சென்னை: குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த போது, குழந்தைக் கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பொய்யான தகவலைப் பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்துவோர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்தார். மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல்களை 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.
அண்மைக் காலமாக, வட மாநில கொள்ளை கும்பல் ஒன்று தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் நுழைந்து, குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம், படங்களுடன் செய்திகளைப் பரப்பி வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பதற்றத்தின் காரணமாக, அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு முதிய பெண்மணி அடித்துக் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அது போல், வட மாநில இளைஞர்கள் பலர் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன், சிலர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களும் ஆங்காங்கே நடபெறுகின்றன.



