ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46,250 கன அடி வீதம் காவிரியில் உபரி நீர் திறந்து விடப் படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 3,700 கன அடி வீதம் காவிரியில் உபரி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதை அடுத்து, தமிழகத்துக்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 5ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 38,916 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 37.48 டிஎம்சியாக உள்ளது.




