தென்மேற்குப் பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடகம் காவிரியில் உபரி நீரைத் திறந்து விடுகிறது. இவ்வாறு காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது.
ஜூலை 16 திங்கள் கிழமை இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 45,316 கனஅடியில் இருந்து 60,120 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 50.30 டிஎம்சி.,யாகவும், திறந்து விடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்து வருவதால் இன்றோ அல்லது நாளையோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த முறை, ஆடிப் பெருக்கு, ஆடிமாத விழாக்களின் போது காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு வரும் என எதிர்பாக்கப் படுகிறது.




