தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் S வீரமணி மற்றும் இந்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப் பட்டதையும், இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் – விளக்கு தயாரிப்பில் ஈடுபடக் கூடிய மண்பாண்ட தயாரிப்பு தொழிலாளிகள் மற்றும் இந்தத் தொழில் முனைவோர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அமைச்சரிடம் இந்தக் குழு எடுத்துக் கூறியுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர் கூறியபோது, அமைச்சர் இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்ட உடனேயே அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் உடனடியாக விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கக்கூடாது… வாய்மொழி உத்தரவாக நீங்கள் பிறப்பித்திருந்தாலும் , உத்தரவை அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளாமல் பக்தர்களுடைய மனம் நோகும்படி நடந்து கொள்ள கூடாது விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய தனியாக இடம் ஒதுக்கி தரவும் -தீ பரவாமல் தடுக்க தேவையான தீயணைப்பு கருவிகள் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனைக் கூறிய இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், அமைச்சரின் உத்தரவு சரியான வகையில் உடனே ஏற்கப்பட்டு விளக்கு ஏற்ற விதிக்கப்பட்ட தடை நீங்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.




