சென்னை: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் காலை நேர புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பெண் தெய்வங்கள் குறித்துப் பேசிய போது, இழிவான கருத்தைத் தெரிவித்ததற்கு, இந்து இயங்கங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதம் நடந்த போது, பெண் தெய்வங்கள், பெண்கள் தீட்டு, என்றெல்லாம் சொல்லி, இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாக கருத்து கூறினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் இது குறித்துக் கூறியபோது…
நெறியாளர் என்கிற போர்வையில் புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கார்த்திகேயன் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த தொலைக்காட்சி இது போன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதை புறந்தள்ள முடியாது. இவர்கள் முதலில் இந்து பெண்கள் புனிதமாக கருதும் தாலியை இழிவு செய்தனர்.
தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்று விவாதம் செய்தனர். ஆனால் அந்நிய நாட்டில் தோன்றிய மதத்தின் விழாவை பாதிரியார்களை அழைத்து வந்து பாட்டுப்பாடி கொண்டாடினர்.
நேற்று இந்து தெய்வங்களை இழிவாக பேசிய கார்த்திகேயன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நிர்வாகத்தின் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
– என்று பாஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


