கன்னியாகுமரி: ஒரிசாவில் மருத்துவக் கல்லுரி மோசடி வழக்கில் பிரபல கல்வித் தந்தை எஸ்.ஏ ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் .
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஏ ராஜா. இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது மகன் ஜான்சல் ராஜா, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார்.
ஜான்சல் ராஜா, ஒடிஸாவில் எஸ்.ஏ ராஜா மருத்துவக் கல்லுரியை நடத்தி வருகிறார். இந்தக் கல்லூரியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஒடிஸா போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிஸாவில் இருந்து வந்த போலீசார், நாகர்கோவிலில் வைத்து ஜான்சல் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஜான்சல் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




