சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாக்களில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் இரவு சென்னை திரும்புகிறார் என்று கூறப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க, இன்று நள்ளிரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் பேரன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் இவர்களைத் தவிர மற்றவர்களையும் தொண்டர்களையும் காவேரி மருத்துவமனை உள்ள பகுதியில் இருந்து அப்புறப் படுத்தும் பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். தொண்டர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றனர்.
இதனிடையே காவல் ரோந்து வாகனங்களுடன் காவலர்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருமாறு காவல் துறை மேலிட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
கருணாநிதியின் இல்லத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. கருணாநிதியின் இல்லம் இருக்கும் சென்னை கோபாலபுரம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். அதே போல் காவேரி மருத்துவமனை அருகே தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் வர முடியாதபடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.




