திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.
நாமக்கல்லில் பரமத்திவேலூர் காவிரி ஆறு, ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் புனித நீராடினர்.
பெருக்கு என்றால் பெருகுவது. ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.
காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும் போது தொடங்கி, காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந் திருவிழா இந்த ஆடிப்பெருக்கு.
தங்களை வாழ வைக்கும், வளப் படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
சேலம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இதனால், கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. ஆண்கள் பெண்கள் என்று பலரும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது ஆடிப்பெருக்கு விழா. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. சென்ற வருடம் காவிரியில் நீர் இல்லாமல் களை இழந்த விழா இந்த வருடம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
காவிரி என்று மட்டும் இல்லாமல், தாமிரபரணி பாயும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆடிப் பெருக்கு விழா களை கட்டியுள்ளது. அருவி நகரமான திருக் குற்றாலத்தில் அருவிகளில் குளித்துவிட்டு திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்து ஆடி 18 விழாவை அன்பர்கள் கொண்டாடுகின்றனர்.




