சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரவோடு இரவாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து மரியாதை செலுத்தலாம் என நினைத்தார் ரஜினிகாந்த். இதை அடுத்து கோபாலபுரம் சென்ற அவருக்கு கூட்டம் அதிகம் என்று சொல்லி அனுமதி மறுக்கப் பட்டதாம். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.
நேற்று இரவு கோபாலபுரம் சென்ற ரஜினியை கூட்டத்தை காரணம் காட்டி திருப்பி அனுப்பியதெல்லாம் நாகரீக அபத்தம். இறுதி அஞ்சலிக்காகத்தானே கோபாலபுர வீட்டில் வைக்கப்பட்டது உடல்.
மம்தா பேனர்ஜி விறுவிறு என அதே நேரத்தில் உள்ளே செல்கிறார். ஶ்ரீ பிரியா, விஜயகுமார் பார்க்கமுடிந்த கலைஞரை, ரஜினியை கூட்டம் அதிகம் என்ற காரணத்தால் விரட்டி விட்டது என்ன நாகரிகம் உடன்பிறப்புகளே… – என்று கேட்டு பொங்கித் தள்ளுகிறார்கள் சமூக வலைத்தளத்தில்!
இந்நிலையில், ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினி, தனது குடும்பத்தினருடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி லதா, மருமகன் நடிகர் தனுஷ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.





