மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய பகுதியில் உள்ளது சின்ன தண்டா. இங்கு ஆடி 18 பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்பட்டது. மேட்டூர் மட்டும் இல்லாமல் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது.
இதனை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். இந்தத் தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் திடீரென சேவல் சண்டை நடந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது வேடிக்கை பார்த்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடினர். அதன் பிறகு பார்வையாளர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.
வழக்கு பதியாமல் வாகனத்தைக் கொடுக்க காவல் ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பணம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளனர். பலர் பணம் கொடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர்.
ஆனால் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் செய்தவரிடம் கொடுத்து அனுப்பினர், அதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ஆய்வாளர் ரவீந்தரனிடம் செந்தில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.




