திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், கட்சி ஸ்டாலின் தலைமையில் செயல்படும் என்று பெரும்பாலான திமுக.,வினர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி வேறு ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
கருணாநிதி சமாதிக்கு வந்த அழகிரி, செய்தியாளர்களை சந்தித்தபோது உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். தொடர்ந்து, நான்என் தந்தையிடம் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று கூறிவிட்டு அழகிரி புறப்பட்டார்.
இதனிடையே போஸ்டர்களுக்குப் பெயர் பெற்ற மதுரை முழுதும் அழகிரியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அழகிரியின் ஆதரவாளர்களால் கலைஞர் திமுக., என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படுவதாக போஸ்டர்களும் பதாகைகளும் களைகட்டின.
இந்நிலையில், அழகிரியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் எல்லாம் இல்லை; ஒரு மாதம் காத்திருங்கள் நல்ல செய்தியை தெரிவிக்கிறேன். நீங்கள் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்றார்.
திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்க்கக் கூடாது என்று கூறப்படும் கருத்து குறித்துக் கேட்ட போது, என் பாதை தனிப்பாதை! அந்தப் பாதையில் நான் போய்க் கொண்டே இருப்பேன் என்றார். மேலும் தன்னை திமுகவில் இணைக்காததற்கு சில காரணங்கள் இருப்பதாகக் கூறி, அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
திமுக.,வில் அதிக அளவிலான தவறுகள் நடந்து வருகின்றன. அழகிரியை கட்சியில் சேர்த்தால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பான் என்பதால் என்னை மீண்டும் சேர்க்க தற்போது தலைமையில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள் அதனால் என்னை கட்சியில் சேர்க்க அவர்கள் தயங்குகிறார்கள் என்றார்.
நான் வெளிப்படுத்திய ஆதங்கம், என் குடும்பம் பற்றியது அல்ல; அது கட்சி தொடர்பானது! திமுகவிற்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. திமுக நிதி வட்டிக்கு விடப்பட்டுள்ளது அந்த வட்டியில் இருந்து கிடைக்கும் லாபம் கட்சிக்கு வரவில்லை; அந்தப் பணம் எங்கே போகிறது என்று கட்சியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
வருகின்ற வரிப் பணத்திலிருந்து யார் யார் பயன் அடைகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நான் திமுகவில் இருந்திருந்தால் இந்தத் தவறுகளைக் களைந்திருப்பேன். இதனால்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைக்க மறுக்கிறார்கள். ஆனாலும் கட்சி நிதி மற்றும் சொத்துகளை சீரமைக்க முயற்சிகள் எடுப்பேன் என்றார் அழகிரி.
கட்சியில் கணக்கு கேட்டதால்தான் திமுக.,விலிருந்து அதிமுக., என்ற கட்சி எம்.ஜி.ஆரால் உருவானது. இப்போது கட்சியில் இல்லாவிட்டாலும், அழகிரிக்கு திமுக.,வில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். அதை முந்தைய தேர்தல்கள் காட்டிக் கொடுத்துள்ளன. எனவே, திமுக., அது குறித்து நிச்சயம் யோசிக்கத்தான் செய்யும். மாறி வரும் சூழலில், திமுக., பலவீனப்படுவதும் பலமடைவதும் அழகிரியை வைத்தே உள்ளது!





