கேரளத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்தும், உணவு பரிமாறியும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.
கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்து பெருவாரியான தொண்டர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மாநிலத் தலைவர் பி. ரபு மனோகர். அவர் தெரிவித்தவை…
கேரளா வெள்ள நிவாரணப் பணிக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு தொண்டர்களின் பணி மகத்தானது.
2018 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மொத்தம் 29 டிரக்குகளில் நிவாரண பொருட்கள் கேரள மாநிலம், பாலக்காட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சேவாபாரதி சென்னை மையத்திலிருந்து 18 டிரக்குகளும், மற்றவை வட தமிழகத்தின் ஈரோடு (1 லாரி), நாமக்கல் (4 லாரிகள்), சேலம் (3 லாரிகள்), தர்மபுரி (1 லாரி), ஓசூர் (1 லாரி) மையங்களிலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 200 டன் வரையிலான நிவாரண பொருட்கள் கேரள வெள்ள நிவாரணத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதில் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள், 70 டன் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்கள், 15 டன் பிஸ்கட் பாக்கெட்டுகள், 3 டன் பால் பவுடர், 5 டன் காய்கறிகள், 15 டன் ப்ளீச்சிங் பவுடர், 5 டன் பினாயில் மற்றும் துப்புரவு பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் ரூ.20 லட்சம் புதிய ஆடைகள் மற்றும் போர்வைகள் அடங்கும்.
கேரளாவில் செயல்பட்டுவரும் 3,965 நிவாரண மையங்களில் சுமார் 85,000 சேவாபாரதி தொண்டர்கள் (20,000 பெண்கள் உட்பட) நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 150 மையங்கள் சேவாபாரதி கேரளா நேரிடையாக நடத்தி வருகிறது.
தற்போது சேவாபாரதி சார்பாக திருவனந்தபுரம், காசர்கோடு மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் மூன்று பெரிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள மற்ற மையங்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் சேவாபாரதி கேரளா மூலம் 150 படகுகள், 70 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 300 வாகனங்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 75,000 க்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள வெள்ள நிவாரணத்திற்காக தமிழகத்தில் உதவிய முக்கிய நன்கொடை யாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் குறித்தும் அவசியம் தெரிவிக்க வேண்டும்.
காஞ்சி மட பக்தர்கள், Green Grid Corporation, சாஸ்தா பல்கலைக்கழகம், ஸத் சங்கம், சென்னை ராஜஸ்தானி வணிகச் சங்கம், RYA மெட்ராஸ் மெட்ரோ அறக்கட்டளை – சென்னை உணவு வங்கி, ராஜஸ்தானி அசோசியேசன், ஸ்ரீ சீரடி சாய்பாபா அறக்கட்டளை, சென்னை விலாம்பட்டி நாடார் உறவின்முறை கல்வி வளர்ச்சி சங்கம், ZOHO கார்பரேஷன் (பி) லிமிடெட் – கூடுவாஞ்சேரி, திரிவேணி பவுண்டேஷன்ஸ் சேலம், ஸ்ரீராம் பைனான்ஸ், Chennai Goods Transport Associaition, மஹாமேரு அறக்கட்டளை, IBM-DLF போரூர், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், வட சென்னை சில்லறை விற்பனை மையம், சென்னை ரோட்டரி கிளப் ஆப் சென்னை பினாக்கில், விவேகானந்தா வித்யாலயா பள்ளிகள், சென்னை, வித்யா மந்திர் பள்ளிகள், சேலம் மற்றும் பலர்.. என்று கூறியுள்ளார் பி. ரபு மனோகர்.
இதனிடையே, நேற்று (22.8.2018) சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் பி. ரபு மனோகர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் கா. சீனிவாசன் கேரளா பாலக்காடு வெள்ள நிவாரண மையம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு பொறுப்பாளர்களுடன் ஆலோசித்தனர்.
இது குறித்து நம்மிடம் தகவல் தெரிவித்த மாநில அமைப்புச் செயலாளர் கா.சீனிவாசன், அங்கு தற்போது தேவையான பொருட்கள் என்று கூறியதாவது.
1) அரிசி (2) மளிகை பொருட்கள் (பருப்பு, மிளகாய்பொடி போன்றவை) (3) புதிய துணிமணிகள்
சென்னை சேவாபாரதி தமிழ்நாடு அலுவலகத்தில் மேற்கண்ட பொருட்கள் சங்கம், சேவாபாரதி பொறுப்பாளர்கள் சேகரித்து வருகிற 26ஆம் தேதி ஞாயிறு காலை 11.00 மணிக்குள் புரசைவாக்கம் சேவாபாரதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேரும் பொருட்கள் மட்டுமே சேவாபாரதி அலுவலகத்திலிருந்து கேரளாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு அலுவலக எண்ணில் (+91 63792 67872 ) தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார் கா.சீனிவாசன்.







