இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை முத்தாய்ப்பாக முடித்தார் மு.க.ஸ்டாலின்.
இன்று திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். கலைஞர் போல பேசவோ, மொழியை ஆளவோ எனக்குத் தெரியாது என்றாலும், எதையும் முயன்று பார்கக் கூடிய துணிவு எனக்கு உண்டு. திமுக தலைவர் ஆவேன் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை! நான் உள்ளிட்ட எந்த தனி நபரை விடவும் திமுகவும் அதன் சின்னமும், கொடியும் பெரிது.
கலைஞர் தந்த என் இதயம், எதையும் தாங்கும். திமுகவையும், தமிழகத்தையும் புதிய எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.
நாட்டையே காவியாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசை தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக தொண்டர்கள் இருக்க வேண்டும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்.
தந்தை பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என பேசினார் மு.க.ஸ்டாலின்!
திமுக., பொதுக் குழுக் கூட்டம் முடிவடைந்தவுடன், நேராக அண்ணா சதுக்கம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கே அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், ஈ.வே.ரா., நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.






