சென்னை: சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, இலக்கிய முன்னோடிகள் வரிசையில் எழுதிப் படித்த கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாளைங்கோட்டையில் சனிக்கிழமை (ஆக.25) நடந்த விழாவில் மதிமுக., பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். பாதிரியார்கள் வேதநாயகம், ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள எழுத்தாளர் மதுரா வாழ்த்துரை வழங்கினார். பைந்தமிழ் மன்றப் பொருளாளர் சண்முக சிதம்பரம் நன்றி கூறினார். விழாவில் கல்வியாளர்களும் பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆய்வுக் கட்டுரையை படித்துக் காட்டினார் வைரமுத்து. பின்னர் அந்தக் கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியானது. ‘கால்டுவெல் : திராவிட முகவரி’ என்ற அந்தக் கட்டுரையில் கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாறு, சமுதாயப் பணி உள்ளிட்டவை குறித்து எழுதியுள்ளார்.
இந்நிலையில் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி என்ற அமைப்பின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் வைரமுத்துவின் கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, வைரமுத்துவின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரப் பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு நாளிதழில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அந்த நாளிதழ் ஆசிரியர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து, அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக, அங்குள்ள மக்களிடம் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து வைரமுத்துவின் கட்டுரைகளை வெளியிடுவதை அந்த நாளிதழும் நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில், ஒடுக்கப் பட்ட மக்கள் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்து வேறொரு நாளிதழில் கட்டுரை எழுதி, அதையும் அந்த நாளிதழ் பிரசுரித்துள்ளது குறித்து அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.




