சென்னை : கருணாநிதி மறைந்த 30வது நாளை அனுசரிக்கும் வகையில் சென்னையில் செப்.5, நாளை மறுநாள் பேரணி நடத்துவது உறுதி என முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக.,வில் விலக்கி வைக்கப் பட்டுள்ளவருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
நான் கருணாநிதியின் மகன் சொன்னதை செய்வேன் என்று கூறியுள்ள அழகிரி, செப்.5ம் தேதி பேரணி நடந்தே தீரும் என்றும், ஒரு லட்சம் பேர் அதில் கலந்து கொள்கிறார்கள் என்றும் உறுதி கூறியுள்ளார். இந்த அமைதிப் பேரணி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் என்று கூறியுள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
அழகிரி வெளியிட்ட இந்த அறிக்கையில், அமைதி பேரணி செப்., 5 காலை 10:00 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் அருகிலிருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தை அடையும்; அங்கு அஞ்சலி செலுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள் அன்று காலை 10:00 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகே வர வேண்டும். பேரணியில் எவ்வித ஆரவாரம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு இடம் தரக்கூடாது. போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
தொண்டர்கள் வாகனங்களை தீவுத்திடல் மற்றும் மெரினா கடற்கரை உட்பகுதியில் நிறுத்தி விட்டு வர வேண்டும். ஊர்களுக்கு திரும்பி செல்லும் வரை கவனமாக எச்சரிக்கையுடன் செல்லவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து கருணாநிதியின் உண்மை தொண்டர்களாக அஞ்சலி செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
அழகிரியின் அமைதிப் பேரணிக்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா என திமுக.,வினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக, அமைதிப் பேரணி நடத்துவது குறித்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி.
தன்னை கட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று அழகிரி கூறியது, திமுக.,வினரை யோசிக்க வைத்தது என்றாலும், இன்னமும் சிலர் அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர். தான் சொன்னபடி ஒரு லட்சம் பேரைத் திரட்டி பிரமாண்ட பேரணி நடத்தினால், கட்சியில் பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதையும் திமுக.,வினர் உணர்ந்தே உள்ளனர். கூடுதலாக கட்சிக்கு பலம் சேராவிட்டாலும், இருக்கும் கட்சியும் கரையும் நிலை ஏற்படும் என்பது மட்டும் உறுதி என பலரும் நினைக்கின்றனர்.
இந்நிலையில் திமுக., தலைமையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 8ஆம் தேதி சென்னையில் திமுக., மாவட்டச் செயலர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் அழகிரியை கட்சியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, நான் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன். சென்னையில் செப். 5ம் தேதி அறிவித்தபடி அமைதி பேரணி நடக்கும். அதில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர். ஸ்டாலினை தலைவராக ஏற்பதாக அறிவித்த பின் கட்சியில் சேர அழைப்பு வராதது குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.





