சென்னை: ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
– இப்படி ஒரு டிவிட்டர் பதிவினை இட்டு, புகைச்சலைக் கிளப்பியிருக்கிறார் அறிவாலைய மடாதிபதியும், திமுக., குடும்பச் சொத்தின் வாரிசுரிமையில் வந்த புதுத் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இப்படி ஒரு பதிவினை வெளியிடுவதற்கான பின்னணி இதுதான். தமிழக பாஜக., தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த போது, அவருடன் பயணித்த பெண் சோபியா என்பவர், தமிழிசையைப் பார்த்து முழக்கங்கள் இட்டதுடன், பாஜக., பாசிச ஆட்சி ஒழிக என்று கூறியுள்ளார். மேலும், அவரை அச்சுறுத்தும் நோக்கில் கருத்துகளையும் முழக்கங்களையும் எழுப்பியுள்ளார்.
இதை அடுத்து அவருடன் வாக்குவாதம் செய்த தமிழிசை, பின்னர் சோபியா குறித்து புகார் அளித்தார். இதன் பேரில் அந்தப் பெண் கைது செய்யப் பட்டார். தமிழிசை சௌந்தரராஜனுடன் வாக்குவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து கொக்கரகுளம் பெண்கள் சிறையில் சோபியா அடைக்கப்பட்டார். இதனிடையே கைதான சோபியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வகையில் கைது செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு சமூகத் தளங்களில் ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் பரவி வருகின்றன. அண்மைக் காலமாக திமுக.,வை எங்கோ உயரத்திக் கொண்டு போய் நிறுத்தியது பாஜக.,
தனித் தமிழ்நாடு கோரிக்கையைப் பேசி, தமிழகத்துக்கு மட்டுமான ஒரு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதிக்கு, தேவையற்ற பில்டப்புகள் கொடுத்து, சர்வதேச அளவுக்கு உயர்த்தி வைத்தது பாஜக.,
ஆனால், அதற்கு தான் கட்சியின் தலைவரானதுமே சரியான பதிலடியைக் கொடுத்தார் மு.க.ஸ்டாலின். மோடியை வசைபாடிய கையுடன் இன்று, தமிழிசைக்கு பதில் கொடுக்கும் விதமாக, வழக்கம் போல் பாசிச பாஜக., ஆட்சி என்று சொல்வதாக தானும் பதிவிட்டிருக்கிறார் ஸ்டாலின்!
இனியாவது சகோதரரே என்று முட்டுக் கொடுத்து முழுகிப் போன அரசியலைக் கொண்டிருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசியல் குறித்து சரியாகப் புரிந்து கொள்வாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் வலைத்தள வாசிகள்!




