
காங்கிரஸ் விட்டுச் சென்ற ரூ 1.44 லட்சம் கோடி கடன், அதற்கான வட்டி இரண்டுமே மோதி அரசுக்கு சுமையாகிப் போனது தான் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாமல் போனதற்குக் காரணம்… என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.
அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, பெட்ரோல், டீசல் இரண்டையும் ஜி.எஸ்.டி வரயறைக்குள் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்போதும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது…
மத்தியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துத் தருகிறேன் எனச் சொல்லி ஏராளமாகக் கடன் வைத்துவிட்டனர். அது, ரூ.1,44,000 கோடி கடன் என்ற அளவுக்குச் சென்று விட்டது.
உலகில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் கடன் பிரச்னையால் பாஜக., அரசால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை.
ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். நேற்றுகூட, தமிழக அரசு இதனை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளது என்று கூறினார் இல.கணேசன்.



