ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓசூர் அருகே சாந்தபுரம் என்ற இடத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல்லை இளைஞர் பலியானார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் குள்ளானம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் நந்தகுமார் (18) இவர் ஓசூரிலுள்ள பேடரப்பள்ளி என்ற பகுதியில் அறை எடுத்து நன்பர்களுடன் தங்கி ஓசூரிலுள்ள பிரபல ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று பேடரப்பள்ளி பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நந்தகுமார் பேடரப்பள்ளி அருகேயுள்ள சாந்தபுரம் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் சிலைகள் கரைப்பின்போது ஏரி நீரில் மூழ்கி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரை காணாத நன்பர்கள் ஏரியில் தேடிப்பார்த்தனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை சிப்காட் போலீஸார் மீனவர்கள் மூலம் ஏரியில் நந்தகுமாரின் சடலத்தை தேடினர், வலைகள் வீசியும், நங்கூரம் போட்டும் அவரது உடலை தேடி வருகின்றனர்.




