நீங்கள் பாஜக., தமிழக தலைமையை ஏற்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்காக நான் தினந்தோறும் அவங்க வீட்டு வாசல்ல போய் நிற்கணுமா? என்று பதில் கேள்வி கேட்டார் பாஜக., பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்திருந்தார் எஸ்.வி.சேகர். கோயிலில் பெருமாளை தரிசித்துவிட்டு, வெளியில் வந்தவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அப்போது அவரிடம், நீங்கள் தமிழக பாஜக., தலைமையை ஏற்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ஏன்.. என்னிடம் தலைமையை கொடுத்தால் ஏற்பேன். தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்றார்.
இதன் பின்னர்தான், கேள்வியை எஸ்வி சேகர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்ட செய்தியாளர்கள், மீண்டும் அவரிடம் அழுத்தம் திருத்தமாக, நீங்கள் பா.ஜ.க. தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? என்று கேட்க, அதற்கு அவர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.!




