சர்ச்சைக்கு உரிய வகையில் தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நெல்லை குறுக்குத்துறை மண்டபம், தைப்பூச மண்டபங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம், தற்போது அது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்:
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வரும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரம் திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதில் திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை மற்றும் பிள்ளையார் கட்டளைக்குச் சொந்தமான நெல்லையப்பர் திருக்கோயில் படித்துறையிலும் புஷ்கர திருவிழா நடைபெறும் காலங்களில் வெள்ளப் பெருக்கு இருக்கும் என்பதால் அந்த இரு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வில்லை.
இந்த இரண்டு இடங்களிலும் அனுமதி வேண்டி இன்று 25-9-18 விழாக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப் படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.




