புது தில்லி: ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டது; நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இப்போது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.
மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களை எதிரிகளைப் போல பார்த்தனர் என்று கூறினார். மேலும், நூறு ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சி, சிறு சிறு கட்சிகளிடம் நற்சான்றிதழ் கேட்டு நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்றார்.
உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.
வாக்கு வங்கி அரசியல், இந்திய சமூகத்தை கரையான் போல் அரித்துவிட்டது என்று கூறிய அவர், தம் மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலரும் என்றார் உறுதியாக!
காங்கிரஸ் கட்சியால், நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியவில்லை. அது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை பிற நாடுகளா முடிவு செய்யும்? ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி, அறிவையும் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமையாக மாறிவிட்டது என்று கூறி, தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முன்னிறுத்தினார் மோடி.
பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




