முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
மாலையில் விழா தொடங்கியதும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.
விழாவில் இறுதியாக சிறப்புரை ஆற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சொல்லின் துணையுடன் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். இது ஆடம்பர விழா அல்ல! நலத்திட்டங்களை அறிவிக்கும் விழா.
சென்னைக்கு அருகே உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
மாம்பாக்கத்தில் துணை மின் நிலையம், அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும்.
விவசாயிகளுக்காக முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் ..
பள்ளிக்கரணையில் ரூ.31 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்; போரூர் – பூவிருந்தவல்லி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.
விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை இனப் படுகொலையை அப்போதைய மத்திய அரசும், அதன் கூட்டணியில் இருந்த திமுகவும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் இடம்பெறவில்லை. இது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




