திருவனந்தபுரம், சபரிமலைக்கு சுற்றுலா வரும் பெண்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந் நிலையில், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தீர்ப்பு குறித்தும் செயல்படுத்தப் படும் முறை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மகுமார், சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில் பெண்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக, 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாகவும் தகவல் கூறினார்.
மேலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும், சபரிமலைக்கு பெண்கள் பெருமளவில் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தக்கல் செய்வது குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தவில்லை; அக்டோபர் 3ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.




