உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகள் திருடப்பட்டு போலியாக அவற்றுக்குப் பதிலாக அண்மைக் கால சிலைகள் வைக்கப்பட்டுள்ளது, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிடிவு ஐஜி பொன்மாணிக்கவேல், டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தஞ்சை பெரிய கோவிலில் சனிக்கிழமை நேற்று ஆய்வு நடத்தினர்.
அதில் அங்கிருந்த 10 சிலைகள் போலியானவை என்பது தெரியவந்தது. தொன்மை வாய்ந்த 165 கிலோ எடையுள்ள ஐம்பொன் நடராசர் சிலைக்கு பதிலாக போலியாக செய்யப்பட்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
சிவன் பார்வதியுடன் முருகன் இணைந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலையில் முருகன் சிலையும், பாலாம்பிகை சிலையும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. சோமாஸ்கந்தர் சிலையின் பீடமும், திருவாசியும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 10 சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த சிலைகள் திருடப் பட்டிருக்கலாம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்தனர். ராஜராஜ சோழன் சிலைக்கு பதிலாக ராஜேந்திர சோழன் சிலையை வைத்து கோல்மால் செய்தபோது தஞ்சை பெரிய கோவிலின் நிர்வாக பொறுப்பில் இருந்த இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தக்கார் இந்த சிலை திருட்டுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப் படுகின்றது.




