சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டுள்ளார். 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தனர்.
முன்னதாக அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் திசை திருப்ப முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப் பட்ட பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் மாளிகையை களங்கப் படுத்தும் விதமாக கற்பனைக் கதைகளை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பல்கலைக் கழகங்களில் ஊழலை ஒழிக்கவும் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆளுநர் மீது, அவதூறு பரப்பும் செயலை இந்த முறைகேடுகளில் தொடர்புடைய அரசியல் கட்சியினர் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.





