சென்னை: தங்களது ஆதரவுப் பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டதற்கு திமுக., தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கோபாலை, ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
ஆளுநரை சந்திக்க தங்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறிய ஸ்டாலின், அவரை சந்திக்கும் போது கோபால் கைது பற்றி முறையிடுவோம் என்றார். மேலும், கோபால் மீது பாய்ந்த சட்டம் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை என வினவினார். அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எச்.ராஜா என்று கூறினார் ஸ்டாலின்.
முன்னதாக பல்கலைக் கழகங்களில் கோடி கோடியாகப் பணம் விளையாடுவது குறித்து கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்காகவும், பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும், அவற்றால் பாதிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயலில் இறங்கினர்.
அதன் ஒரு படியாக, ஆளுநர் ஆய்வை கொச்சைப் படுத்தி, தங்கள் ஊடகங்கள், டிவி., செய்திகள், பத்திரிகைகளில் ஆளுநரைக் குறித்த மோசமான இமேஜ் உருவாக்க மிகப் பெரிய அளவில் இறங்கினார்களாம். தொடர்ந்து, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தை உருவாக்கி, அதன் மூலம் ஆளுநரைப் பழி வாங்க ஒரு தரப்பு முயன்றதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய், ஒரு பத்திரிகையாளராக பணி செய்து, ஊடகத்தை நடத்தி பின்னாளில் அரசியலுக்கு அந்து, இன்று ஆளுநராக உள்ள பத்திரிகையாளர் பன்வாரி லால் புரோஹித்தை, பெண் தொடர்பில் சிக்க வைத்து அசிங்கப் படுத்துவதற்காகவே தமிழகத்தின் ‘கிளு கிளு’ பத்திரிகையான நக்கீரனில் புலனாய்வு என்ற பெயரில் புனை கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.
பத்திரிகை சுதந்திரம் என்பதன் எல்லை மீறப் பட்டதாலும், பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பக்கா அரசியல் செய்து வந்ததாலும், ஆளுநரின் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்தில் செயல் பட்டுக் கொண்டிருப்பதாலும், ஆளுநர் அளித்த புகாரின் பேரில் திமுக., பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பொங்கி எழுந்து, பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது.
இது தொடர்பில் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள்…..
பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்!
— M.K.Stalin (@mkstalin) October 9, 2018
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க!
— M.K.Stalin (@mkstalin) October 9, 2018




