சென்னை: நீதிமன்றத்தை ஹெச்.ராஜா அவமதித்ததாகக் கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதான பொதுக்கூட்டம் தொடர்பாக, போலீசாருடன் நடந்த வாக்குவாதத்தில் ஹெச்.,ராஜா நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையிலான சொற்களைப் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.
இதை அடுத்து, போலீஸார் மற்றும் நீதிமன்றத்தை ஹெச்.ராஜா இழிவுபடுத்தினார் என்று கூறி கொடுக்கப் பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டனர். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் ஹெச்.ராஜா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது ஹெச்.ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில். தாம் உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறிப் பேசி விட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஹெச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.




