சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒட்டி, சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐPடு) கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் 09.04.2015 ,11.04.2015, 25.04.2015, 28.04.2015, 04.05.2015, 08.05.2015 மற்றும் 10.05.2015 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் போட்டியைக் காணவரும் பார்வையாளர்களின் நலன் கருதி கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படும்.
- வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் குறைந்த வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் வாலாஜா சாலை மற்றும் பாரதி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
போட்டியைக் காணவரும் பார்வையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதன் பின்புறம் குறிப்பிட்டுள்ள சாலைகளின் வழியாகச் சென்று நிறுத்தலாம். பாரதி சாலை விக்டோரியா விடுதி சாலை வழியாக வரும் வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை வழியாகவும் மெட்ராஸ் யூனிவர்சிட்டி பார்கிங் செல்லும் வாகனங்கள் மட்டுமே காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் அரசினர் விருந்தினர் மாளிகை சந்திப்பிலிருந்து அனுமதிக்கப்படுவர். எம்.சி.சி. பார்கிங் செல்லும் வாகனங்கள் மட்டுமே பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
உழைப்பாளர் சிலை சந்திப்பில் காமராஜர் சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அண்ணா சதுக்கத்திலிருந்து உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சந்திப்பு, பாரதி சாலை வழியாக பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை அடையலாம்.
வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக வரும்பட்சத்தில் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.
போர் நினைவுச் சின்னம் மற்றும் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து வருகின்ற வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் நிறுத்தலாம் அல்லது மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.
வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் காந்தி சிலையில் இருந்து வரும்பட்சத்தில் சீரணி அரங்கம் அருகே வலதுபுறம் திரும்பி மெரினா நீச்சல் குளம் அருகே கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம்.
மேற்கூறிய போக்குவரத்து மாற்றங்கள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக செல்வதற்காக சென்னை போக்குவரத்துக் காவலால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.