காவலரைக் கொல்ல முயன்ற போக்குவரத்து ஆய்வாளர்! மனித உரிமை ஆணையம் அறிக்கை தர உத்தரவு!

Published:

police ins teynampet road accident - 2026

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கீழே தள்ளிவிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டரின் கொலை முயற்சி குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆய்வாளர் முதலில் ஆயுதப் படைக்கு மாற்றப் பட்டதாகவும், பின்னர் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அவர் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் தருமராசன் தனது தாயின் திதி என்று கூறி, ஆய்வாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு சில தினங்களுக்கு முன்னர், தனது திருமண நாளின் போதும் விடுப்பு கேட்டுள்ளார். அதற்கும் விடுப்பு மறுக்கப் பட்டதாம்.

இவ்வாறு, தனக்கு விடுப்பு தர மறுத்து விட்டதால் மனச் சோர்வில் இருந்த தருமராசன் வயரெஸ் வாக்கி டாக்கி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 21.11.2018 அன்று கூறியுள்ளார். அதில், “எனது தாயின் திதிக்கு ஆய்வாளர் விடுப்பு தர மறுக்கிறார், நான் என்ன செய்வது” என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி கேட்டுள்ளார்.

அதைக் கேட்ட ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி, அவரை உடனடியாக பணி மாற்றி அனுப்புவதாகக் கூறிவிட்டு, அவரிடம் இருந்து வயர்லெஸ்ஸை வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வயர்லெஸ் மூலம் காவலர் தருமன் தகவல் அளித்ததால்  கோபம் கொண்ட ஆய்வாளர் ரவிச் சந்திரன், காவலர் தருமன் அவர் வீட்டிற்குப் போகும் வழியில் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, ரோட்டில் காத்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவு போக்குவரத்து நிறைந்த சாலையில், தருமன் அவ்வழியே வருவதைக் கண்டுபிடித்து, நடுரோட்டில் வேகமாக வரும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களையும் கடந்து ஓடி, காவலர் தருமனை மோட்டார் சைக்கிளில் இருந்து பிடித்து இழுத்து கீழே தள்ளி அவருடைய உயிருக்கே உலை வைக்கும் வகையில் வன்மத்துடனும் வெறியுடனும் செயல்பட்டார்.

இதனால் சாலையில் சறுக்கி விழுந்த தருமனுக்கு கை,கால் மற்றும் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டது. அதே நேரம், அந்த சாலையின் வேறு புறத்தில் இருந்து ஒரு வழிப் பாதையில் வேகமாக வந்த டாடா ஏஸ் வாகனம், சாலையில் ஆய்வாளர் ஓடி வருவதையும், ஒரு பைக் சறுக்கிக் கொண்டு சாலையில் விழுவதையும் கண்டு, சட்டென்று பிரேக் அடித்து நின்றது. பைக்கில் சறுக்கியபடி விழுந்த தருமன் சரியாக அந்த டாடா ஏஸ் வாகனத்தின் அடிப்பகுடியில் போய் நிலைகுலைந்து விழுந்தார்.

இதை அடுத்து, கீழே விழுந்த தருமனை எழுப்பிய வேறு காவலர்கள், அவரைத் தூக்கி. தேனாம்பேட்டை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதே நேரம், வேறொரு காவலர் தருமனை ஏற்றிய போலீஸ் வாகனத்தில், ஒரு கவரில் மது புட்டிகளைக் கொடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

வாகனத்தில் வைத்து, காயத்துக்கு மருந்து போடுவது போல் பேசிக் கொண்டு, அவருக்கு மது கொடுத்து, தருமன் மது போதையில் உள்ளதாக மருத்துவச் சான்றிதழ் பெற்றனர். உயர் அதிகாரி உதவியுடன் மேல்அதிகாரிடம் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்யவும் இதையே காரணமாகக் காட்டியுள்ளனர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

பின்னர் விசாரிக்கையில் காவலர் தருமன் பணி முடிந்து, தனது தாயின் திதி காரணமாக விடுப்புக்கான விண்ணப்பத்தை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்கச் சென்ற போது, அவரை ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாலையில் விரட்டிப் பிடித்து, வண்டியுடன் சேர்த்து கீழே தள்ளினார் என்றும், அவரை ரோந்து வாகனத்தில் ஏற்றிய பின், காவலர் தருமன் தலையில் ஏற்பட்ட காயத்தினால் மயங்கிய நிலையில் ஆய்வாளர் இரண்டு நபர்களின் உதவியுடன் அவருடைய இரண்டு கைகளையும் வலுகட்டாயமாக பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றினர் என்றும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது போதையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளனர் என்றும்  தெரியவந்தது.

இவை அனைத்தும் அங்கிருந்த போலீஸார் நிறுவிய சிசிடிவி கேமிராவிலேயே பதிவானது என்பதுதான் இந்தப் பிரச்னை வெளியுலகுக்குத் தெரியவந்ததற்கான காரணமாக அமைந்தது.

தருமனிடம் இதைப் பற்றி விசாரித்த போது தனக்கு நடந்தவை என்னவென்றே தெரியாது என்றும், ரோந்து வாகனத்தில் ஏற்றிய பின் தலையில் ஏற்பட்ட காயத்தினால் அரை மயக்கத்தில் இருந்த போது தனக்கு மது ஊற்றியதால் மயக்கமடைந்ததாகவும் மயக்கம் தெளிந்த நிலையில் கண் விழித்துப் பார்த்த போது தான் மருத்துவமனையில் இருந்த்தாகவும் தகவல் தெரிவித்தார்.

தேனாம்பேட்டை ஆய்வாளர் ரவிச்சந்திரன் இவ்வாறு சாலையில் மிகவும் கோபத்துடனும் வன்மத்துடனும் பாயும் காட்சிகள் CCTV கேமிராவில் பதிவாகியுள்ளதால், இது அவர் கொலை முயற்சிக்கு ஈடான செயலைச் செய்தது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

இவர் கீழே விழுந்தபோது அங்கே வந்த டாடா ஏஸ் வாகனம் மட்டும் பிரேக் அடித்து நிறுத்தப் படாமல் இருந்தால், காவலர் தருமன் அங்கேயே உயிரிழந்திருப்பார். எனவே, இவர் மீது காவல். உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து காவலர் தருமனின் மனைவி போலீஸில் புகார் அளித்தார்.  இந்நிலையில், காவல் துறையில் உள்ள ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானியராக இருந்தால் கொலையே நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு என்ற அச்சத்தை, இந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் காட்டி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் கடுமையான வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

காவலர்கள் மன அழுத்தம் குறைப்பதற்காக, யோகா போட்டிகள், விளையாட்டு, கேட்கும் நிலையில் விடுப்பு அளித்தல் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அண்மைக் காலமாக சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஆனால், இங்கோ, உயரதிகாரிகள் படுத்தும் பாடு கொலை வெறி அளவுக்குக் கொண்டு செல்கிறது என்று அங்கலாய்க்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.. இதுதான்! 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img