ஜெயகாந்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்: திருமாவளவன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு  நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 உலகறிந்த எழுத்தாளரும் ஞானபீட விருதுபெற்றவருமான ஜெயகாந்தன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவு தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.  அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கியத்தின் எண்ணற்ற படைப்களை எழுதிக் குவித்தவர்.  தமிழ்த் திரையுலகிலும் புதுமையான திரைப்படங்களை உருவாக்கி தனி முத்திரை பதித்தவர்.  மனதில்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர். தமிழ் இலக்கியவாதிகளுக்கு மதிப்பை உருவாக்கியவர். திரு.ஜெயகாந்தன் அவர்களைப்போல தமிழ் இலக்கிய உலகில் இன்னொருவரைச் சுட்டிக்காட்ட முடியாது.
 சமூகத்தில் விளிம்புநிலை மாந்தர்களை உயிர்த்துடிப்போடும் சுயமரியாதையோடும் தனது படைப்புகளில் அவர் சித்திரித்தார்.  எவரும் எழுதத் துணியாத கருத்துகளை இலக்கியங்களாய்ப் படைத்தார்.  குறிப்பாக, அவர் படைத்துக்காட்டிய பெண் பாத்திரங்கள் தனித்துவம்கொண்ட ஆளுமைகளாக விளங்குவதைக் காணலாம்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறுவகையான அடிமைத்தனம் சார்ந்த மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்தியவர் ஜெயகாந்தன்.  அந்த வகையில் அவரை தந்தை பெரியாரின் இலக்கிய வாரிசு எனக் குறிப்பிடலாம்.
திராவிட இயக்கத்தின் மீதும் இடதுசாரித் தத்துவத்தின் மீதும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் காழ்ப்புணர்வின் அடிப்படையிலானவை அல்ல.  மாறாக, சமூகப் பொறுப்புணர்விலிருந்தே செய்யப்பட்டவை என்றுதான் கருதப்பட வேண்டும்.  அதனால்தான் அவரோடு திராவிட இயக்கத் தலைவர்களும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் எப்போதும் மதிப்போடு நட்பு பாராட்டி வந்தனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு மறக்கத்தக்கதல்ல.  அதை அங்கீகரிக்கும்வகையில் அவருக்கு நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன், தமிழக அரசு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு சென்னையில் நினைவு மண்டபம் ஒன்றை எழுப்ப வேண்டும் எனவும், அவரது பெயரில் விருது ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.