‘தாலியறுக்கும்’ வீரமணியைக் கைது செய்யும்வரை போராடுவோம்: தேவநாதன் யாதவ்

devanathan-vanathi சென்னை: தாலி அறுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் வரும் 14ஆம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், போராட்டத்தற்கு தடை விதிக்க கோரியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் தி. தேவநாதன் யாதவ், இந்து கடவுள்களை குறிவைத்து, விமர்சனம் செய்வது, கொச்சைப்படுத்துவது, போன்றவற்றின் மூலம் வயிற்று பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் கி. வீரமணி, தைரியமாக வெளியே நடமாடிக்கொண்டிருக்கிறார் என்றும், இதனை தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். கி. வீரமணி போன்றவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, இந்த அரசுக்கு தைரியமில்லை என்றும், வீரமணிக்கு இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தாலி அறுப்பது என்பது கணவரின் மறைவுக்கு பின்பு, ஒரு மனைவி செய்வது என்றும், அது அவர்களுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். இந்து மதத்துடன் மட்டுமே மோதும் வீரமணி, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களுடன் மோதுவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்து மதத்தை விமர்சிக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வீரமணி தவறினால், லட்சக்கணக்கானோரை திரட்டி பெரியார் மாளிகையை முற்றுகையிட்டு, அவரை அங்கிருந்து வெளியேற்றப்போவதாக அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பேசிய தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவரும், வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான வசந்தகுமார், இந்தியன் என்ற முறையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்தியா பல மதங்கள் மற்றும் இன மக்களை கொண்ட நாடாகும் என்றும், இதனை கொச்சைப்படுத்தும் வகையிலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் தாலி அறுக்கும் போராட்டத்தை கி.வீரமணி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் பகுத்தறிவை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், இந்து கடவுள்களையும் சின்னங்களையும் தொடர்ந்து அவமதித்து வருவதாக தெரிவித்தார். கேள்வி கேட்கும் கருத்து சுதந்திரத்தை இந்து தர்மம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். முதலில் தாலி அறுக்கும் போராட்டம் என்று அறிவித்த கி.வீரமணி, பின்னர் எதிர்ப்பை கண்டு தாலி அகற்றும் போராட்டம் என்று திருத்தம் செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவர்கள் தாலிக்கு பதிலாக சிலுவையை அணிகிறார்கள் என்றும், இதேபோல் இஸ்லாமியர்களும் மங்கலநானை அணிவதாகவும் தெரிவித்தார். தமிழ் சமுதாயம் போதைக்கும் இலவசத்திற்கும் அடிமையாகிவிட்டதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மை புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், ஆய்தம் இயக்க நிர்வாகி நாதன், திருமதி. அனுசந்தரமௌலி, ராதாராஜன், ஆகியோர் பேசினர். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி, இறைவாழ்த்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.