
திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார்.
அதிமுக.,வில் இருந்து தினகரன் அணிக்கு தாவி, பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்மையில் பேரவைத்தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்த 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். இந்த 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறிய நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லையாம். இதனால் வருத்தத்தில் இருந்த செந்தில் பாலாஜி, அமமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகக் கூறப் படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு உள்ளூரில் அதிமுக.,வுடன் நெருக்கடி உள்ளது. கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் செந்தில் பாலாஜிக்கு மோதல் உள்ளது. எனவே தான் மீண்டும் அதிமுக.,வுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 11.30 மணி அளவில் செந்தில் பாலாஜி திமுக.,வில் இணைய உள்ளார்.
இதனிடையே,செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி, செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றால் செல்லா காசு ஆகி விடுவார். செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என சாபம் இட்டார்!
முன்னதாக, நேற்று சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால், இணைத்துக் கொள்வோம்; தினகரனைத் தவிர என்று கூறினார்.
மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்துக் கூறிய போது, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ் – ஓபிஎஸ் வழங்குவார்கள்; செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் எங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லை என்றார்.