தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம்! ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு

student-beaten-up-head-master தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயினர். அந்த மாணவன் ஏடிஎம் அட்டை, ஓர் ஆசிரியை, வீட்டில் இருந்த நகைகளுடன் காணாமல் போயுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி அருகே குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் அந்த மாணவர். அவரது தந்தை கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் சந்திரகுமார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (15) அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி இவர், வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது தந்தை, தனது மகன் சிவசுப்ரமணியனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குச் சென்றார் என்று விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த கோதை (23) என்பவரும் மாயமானது தெரியவந்தது. 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சில இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பழகுவது குறித்து மாணவரின் பெற்றோருக்கும், ஆசிரியையின் நட்பு வட்டம் மற்றும் சக ஆசிரியர்களும் தெரிய வந்ததால், அவர்கள் இருவரையும் அழைத்து புத்திமதி சொல்லி, சத்தம் போட்டுள்ளனர். அவர்களுக்கு அறிவுரை சொல்லியும் இருவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனிடையே கடந்த 31-ந்தேதி முதல் இருவரும் மாயமாகியுள்ளனர். போகும் போது சிவசுப்பிரமணியன் கையில் ஏ.டி.எம். கார்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். மேலும் சுமார் ரூ. 500 வரை அவர் வைத்திருந்ததாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60பவுன் நகைகளும் காணவில்லையாம். இந்நிலையில், இருவரும் எங்கு சென்றார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் காணாமல் போய் சுமார் 10 தினங்கள் கடந்த நிலையில், இவர்களைப் பற்றிய செய்திகள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றில் பரபரப்பாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுவே, இப்போது இந்த விஷயம் வெளியில் தெரியக் காரணமாக அமைந்துவிட்டது.