நேற்று வெள்ளிக்கிழமை ஹைதராபாத் மல்லாப்பூரைச் சேர்ந்த பதினைந்து வயது டீன் ஏஜ் பெண் குழந்தைத் திருமணத்திலிருந்து ‘நாச்சாரம்’ பகுதி காவல் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டாள்.
மல்லாபூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அப்பெண் வெள்ளிக் கிழமை இறுதித் தேர்வு எழுத வேண்டிய நிலையில் திருமண ஏற்பாட்டால் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டாள்.
திருமண முகூர்த்தம் காலை பதினோரு மனி அளவில் நடக்க இருக்கையில் காலை ஒன்பது மணிக்கு சைல்ட் ஹெல்ப் லைன் 109 ஐத் தொடர்பு கொண்டு தன் திருமணத்தை நிறுத்த வேண்டினாள்.
சைல்ட் வெல்பேர் அதாரிட்டி அதிகாரிகளும் ‘ஷி’ டீம் மெம்பர்களும் அழைப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் திருமண மண்டபத்தை அடைந்து அந்தப் பெண்ணை மீட்டனர்.
நன்கு படிக்கும் பிரகாசமான மாணவியான அப்பெண்ணின் விருப்பத்திற்கெதிராக 21 வயது உறவினர் பையனுக்குத் திருமணம் நிச்சயித்திருந்தனர் பெற்றோர். மணமகன் யாதகிரிகுட்டாவில் தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிகிறான்.
“திருமணம் நாச்சாரத்திலுள்ள கே.எல்.ரெட்டி. நகர கம்யூனிடி ஹாலில் நடக்க இருந்தது. மணப்பெண்ணின் சமயோசித புத்தியால் குழந்தைத் திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை நிறுத்தி பெண்ணை மீட்டு பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம்” என்று குழந்தைகள் நல அதிகாரி தெரிவித்தார்.
“நல்ல மதிப்பெண்கள் எடுத்துவரும் அப்பெண் மேற்படிப்பு படிக்கும் ஆர்வத்திலுள்ளாள். அதற்குள் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினாள். இறுதியில் துணிவு பெற்று முகூர்த்தத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பு சைல்ட் ஹெல்ப் லனைத் தொடர்பு கொண்டாள். அதிகாரிகள் அவளுடைய வயதுச் சான்றிதழ்களைப் பள்ளியிலிருந்து பெற்று அவளை மீட்டனர். அப்பெண்ணுக்காக தனியாக மீண்டும் தேர்வு நடத்தும்படியும் இல்லாவிடில் அவளுடைய ஓராண்டு படிப்பு வீணாகி விடும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்” என்று என்ஜிவோ சிறுமிகள் உரிமை சங்கத்தைச் சேர்ந்த அச்யுத ராவ் தெரிவித்தார்.
தனக்கு மேலே படிக்கக் விருப்பமென்றும் பெற்றோர் அதற்குத் தடையாக உள்ளதாகவும் அப்பெண் தெரிவித்தாள். மணப்பெண்ணின் பெற்றோர் அவள் மைனர் அல்லவென்றும் பதினெட்டு வயது நிரம்பி விட்டது என்றும் கூறி ஆதார் அட்டையை ஆதாரம் காட்டினர். சிறு குழப்பம் நிலவிய சூழலில் பள்ளியிலிருந்து அவளுடைய சான்றிதழ்களைப் பரிசீலித்து அவள் மைனர்தான் என்று தீர்மானித்து பெண்ணை மீட்டு பெண்ணின் பெற்றோரை ‘உப்பல்’ மண்டல ரெவின்யூ ஆபீசரின் எதிரில் ஆஜர்படுத்தினர் காவல் துறையினர்.
“தங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தாங்கள் இறப்பதற்கு முன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட விரும்பியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்” என்று ‘நாச்சாரம்’ பகுதி இன்ஸ்பெக்டர் எம்.மகேஷ் தெரிவித்தார்.
அந்த டீன்ஏஜ் பெண் ‘நிம்போலிடா’ ஷெல்டர் ஹோமுக்கு அனுப்பப்பட்டாள்.
“இது இந்த ஆண்டில் தடுக்கப்பட்ட பதினோராவது குழந்தைத் திருமணம். சென்ற வாரம் ஒரு பதினான்கு வயது டீன் ஏஜ் பெண் ‘காலாபத்தர்’ ஏரியாவில் மீட்கப்பட்டாள். கடந்த இரண்டு வருடங்களில் ‘ரச்சகொண்டா’ போலீசார் 75 சைல்ட் மேரேஜஸ்களை தடுத்துள்ளனர். 2018 ல் மட்டும் 47 குழந்தைத் திருமணங்கள் நடப்பது எங்கள் பார்வைக்கு வந்து தடுத்துள்ளோம். யாதாத்ரி மாவட்டத்தில் மட்டும் 28 மைனர் பெண்களை 15 லிருந்து 17 வயதுள்ள பெண்களின் திருமணங்களை நிறுத்தியுள்ளோம். மேலும் ‘ரச்சகொண்டா’ காவல் துறையினர் கிராமங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக அவேர்நெஸ் ப்ரோக்ராம்களை நடத்துவதோடு அவர்களின் பெற்றோருக்கு கௌன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்” என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், “பத்தாம் வகுப்பு படிக்கும் டீன் ஏஜ் பெண்கள் அதிகமாக குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள். அதனால் முன்கூட்டியே அவர்களுக்கு கௌசலின் கொடுக்கத் தொடங்கியுள்ளோம். ஏனென்றால் பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் எங்களுக்குத் தெரியாமலே நடந்து விடுகின்றன” என்றும் கூறினார்.
-ராஜி ரகுநாதன்



