டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

Published:

06 Aug13 TTV Dinakaran - 2026

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.

பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

திருவள்ளுவர் திடலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியபோது… கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்தியில் கூட்டணி அரசில் திமுக பங்கு வகித்த காலத்திலும் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை.

பாலியல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சிபிசிஐடி விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஜெயலலிதா கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து அனைத்து மாநிலங்கள் வழியாக செல்லும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழிலை மேம்படுத்த நெகமத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்கப்படும். பொள்ளாச்சியில் அதிகளவு படப்பிடிப்புகள் நடைபெறுவதால் இங்கு திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன் மூலம் பொள்ளாச்சி மேலும் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்!

Related articles

Recent articles

spot_img