என் அரசியல் வாழ்க்கையே 2019 தேர்தலுக்குப் பிறகுதான் துவங்கப் போகிறது: எடப்பாடி சூசகம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

edappadi salem2 - 2026

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வே தொடங்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பொதுக்கூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

edappadi salem - 2026

விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் அரசு அதிமுக அரசு. விவசாயம், விவசாயிகள் செழிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2 ஆண்டுகளில் சேலம் நவீனமான நகரமாக மாறும். காவிரி கோதாவரி இணைப்பு மூலம் வறட்சியான பகுதிகள் செழிக்கும்.

மத்தியில், நிலையான அரசு அமைய மெகா கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு பிறகு முதல்வரின் அரசியல் வாழ்க்கை கிழியும் என ஸ்டாலின் கூறுகிறார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை துவங்கும். முதல்வர் நாற்காலி என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்…. என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடலில் வீணாக கலக்கும் கோதாவரி உபரி நீரை, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், கால்வாய்கள் அமைத்து, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டம், பாஜக ஆட்சி அமைந்த உடன் முன்னெடுக்கப்படும்; 7 லட்சத்து 50 ஆயிரம் கோடியில் நீர் மேலாண்மை திட்டங்கள், துறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.