திருவனந்தபுரம்: கேரளாவுக்கு கோழிக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞரைத் தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப் படுகின்றன. இதைத் தடுக்க எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனைச் சாவடியில் வணிக வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்தது. அதன் இருபுறமும் ஏராளமான கோழிகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிகாரிகள் மீது வண்டியை மோதிவிட்டு தப்ப முயன்றார். இதில் அதிகாரிகள் சந்திரபாபு, பிஜு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளும் நிலை தடுமாறிக் கீழே விழுந்தது. இதனால், ஊழியர்கள் விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாறசாலையச் சேர்ந்த முகமது (23) என்பதும் குழித்துறையில் இருந்து கேரளாவுக்கு கோழிகள் கடத்துவதும் தெரிய வந்தது. இதை அடுத்து, அவரிடம் இருந்து 145 கிலோ எடை கொண்ட கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது நெய்யாற்றின்கரை போலீசில் ஒப்படைக்கப் பட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

