
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பி.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் மகாலட்சுமி (19). மாற்றுத்திறனாளியான இவர் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சங்கரன்கோவில் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மகாலட்சுமி, மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லூரியின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து, மகாலட்சுமி மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி பேராசிரியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர்களே மாணவி மகாலட்சுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



