ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் இறப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தல்

  ”இந்தியாவில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உழவர் உழைப்பாளர் சங்க நிறுவன தலைவர் பொங்கலூர் .இரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.., தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மூடப்படாத 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் இன்று இரண்டரை வயது சிறுவன் தமிழரசன் தவறி விழுந்து பல மணி நேரம் போராடி அவனை மீட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தண்ணீர் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகள், அஜாக்கிரதையாக மூடப்படாமல் விடுவதால் குழந்தைகளின் உயிரைக் குடித்து விடுகின்றன. ஏற்கனவே, ஆபத்தான, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உத்தர விட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் அநியாயமாக பல உயிர்கள் தொடர்ந்து காவு கொடுக்கப்படுகிறது. இதோ, சமீபத்தில் இந்தியாவில் ஆழ்துளை கிணறு விபத்துக்கள் பற்றிய தொகுப்பு: 2006 ஜூலை 21-ல் 5 வயது பிரின்ஸ் என்னும் சிறுவன் ஹரியாணா மாநிலத்தில் ஹாபாத் என்னுமிடத்தில், விவசாயப் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்தான். 50 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

 • 2007 மார்ச் 11-ல், குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில், ஆர்த்தி என்னும் 4 வயது சிறுமி 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள்.
 • இதே ஆண்டு, மார்ச் 22-ல் ராஜஸ்தானில் உள்ள ராணாபடா என்னுமிடத்தில், 200 அடி ஆழத்தில் விழுந்த, சுனில் என்னும் 3 வயது சிறுவன் மீட்கப்பட்டான்.
 • ஜூலை 27-ல் ஜெய்ப்பூரில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
 • 2008, ஜனவரி 30-ல் கர்நாடகாவில் பூஷனூர் என்னும் கிராமத்தில், 40 அடி ஆழத்தில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
 • 2008, மார்ச் 28-ல், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில், 45 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
 • 2009, ஜூன் 21-ல் ராஜஸ்தானில் டவுசா என்னும் இடத்தில் 48 அடி ஆழத்தில் விழுந்த 4 வயது குழந்தை, 19 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.
 • 2010, ஜூன் 3-ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே 200 அடி ஆழத்தில் விழுந்த கெளர் என்னும் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
 • 2011, மே 20-ம் தேதி, மகாராஷ்டிராவில் நாசிக் வயல்வெளியில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 மாதக் ஆண் குழந்தை உயிரிழந்தது.
 • 2011 செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்.
 • 2012, ஜூன் 25ம் தேதி குஜராத்தில் ஜஸ்டான் என்னுமிடத்தில், 30 அடி ஆழத்தில் ஒரு வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
 • 2012 மார்ச் மாதம் இந்தூரில் பயால் என்ற குழந்தை, பயனற்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானது.
 • 2012 ஜூன் 24ம் தேதி, ஹரியானாவில் குர்காவ்ன் அருகே கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி 70 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 24ம் தேதி சடலமாக மஹி மீட்கப்பட்டாள்.
 • 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவலகிரி கிராமத்தில், 600 அடி கிணற்றில் குணா என்ற 3 வயது சிறுவன் தவறி விழுந்தான். 20 அடி ஆழத்தில் சிக்கித்தவித்த சிறுவன் 4 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு.
 • 2013 ஏப்ரல் 27ம் தேதி கரூர் மாவட்டம் சூரிப்பாளையத்தில், 600 அடி ஆழ்துளை கிணற்றில் முத்துலட்சுமி என்ற சிறுமி தவறி விழுந்து இறந்தாள்.
 • 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப் பட்டான்.
 • 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 14 மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.

இந்தியாவில் முதுகெலும்பாக உள்ள விவசாய தொழில் ஒவ்வொரு நதியும் இணைக்கப்பட வேண்டிய சூழலில் தண்ணீர் தேவைக்காக மிகவும் பலர் படிப்பறிவில்லாமல் விவசாயமே குலத்தொழிலாளாக செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு விவசாயத்தில் முறையான வழிகாட்டல் இல்லாமல் தங்களின் தண்ணீர் தேவைக்காக பல அடி ஆழத்தில் ஆழ்துளை மூலம் கிணறுகள் தோண்டி நீரை எடுக்கின்றனர். பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது முறையான வழிகாட்டல் இல்லாமல் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் பல ஆயிரத்தில் செலவழித்தும் பயனில்லாமல் போவதால் போதிய விழிப்புணர்வு இல்லாத விவசாயிகள் விரக்தியில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் தான் ஏகப்பட்ட மாநிலங்களில் இந்த விவசாய நிலங்களில் ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அங்கேயே தங்கி விடுகின்றனர். இதில் விளையாட செல்லும் சிறுவர், சிறுமிகள் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலைகள் கடந்த 2006 ல் இருந்து இந்த நிலை ஏற்பட்டு வருகிறது. அதற்குமுன் மீடியாக்களின் வளர்ச்சி அடையாத காலத்தில் ஏகப்பட்ட இறப்புகள் மூடி மறைக்க்பட்டது. இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும், விவசாயத்தை சார்ந்த மக்களும் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளான இந்த விஷயத்தை முறையான மற்றும் மிக கடுமையான சட்டத்தை இயற்றுவதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய துறைக்கென  அதிகாரிகள் பலர் இருந்தும்  இவர்களுக்கு முதலில் இந்த ஆழ்குழாய் கிணற்றின் மூலம் ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது என்று மாதம் தோறும் நடைபெறும் விவசாய கூட்டத்திலும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொடுக்கப்படும் இடங்களில் முறையான எளிமையான படங்களுடன் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விளக்கியும்,நேரடி ஆழ்குழாய்க் கிணறுகள் பற்றிய விவரம் தெரிந்து வைத்து இருக்க வேண்டியவரான கிராம நிர்வாக அலுவலர் மூலம் பதிவேடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாப்பது கட்டாயக் கடமையாகும். DSC05459அது மட்டுமில்லாமல் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத்திற்கு தகுந்த வாறு என்னென்ன சாகுபடி செய்யலாம், நவீன இயந்திரங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் தெரியப்படுத்தும் வகையில் குறும்படங்கள் மற்றும் கூட்டத்தின் வாயிலாக கண்டிப்பாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது இந்த ஆழ்குழாய் கிணறு பற்றி பாதுகாப்பான விஷயத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனை குறும்படமாக அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆகவே இது போல தொடரும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் இறப்பதை தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து இளம் அப்பாவிக் குழந்தைகளையும்,விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் .இரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.