புளூவேல் விளையாட்டை தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான்.
இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும் வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை
சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவியது. கண்ணுக்கு தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற டாஸ்க்கும் உண்டு.
உலகம் முழுவதும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு பலியாகினர். இந்த சேலஞ்சால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என போலீசார் எச்சரித்தனர்.
தற்போது, மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதுஎன்ன மோமோ சேலஞ்ச் என கேட்கிறீர்களா?
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோக்கு சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும்.
இந்த மிரட்டல் பயம் காரணமாக அர்ஜெண்டினா சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸப் போன்ற தளங்கள் மூலமாக இந்த கேம் லிங் பரப்பப்படுகிறது.
மோமோ எனும் மிக ஆபத்தான சவால் உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது.
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் மோமோ சேலஞ்ச் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்ல. ஆனாலும் காவல்துறை இது குறித்து எச்சரிக்கிறது.
இது குறித்து சென்னை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த மூன்று மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு மோமோ சேலஞ்ச் செய்தி வந்துருப்பதாகவும், தன்னைப் பற்றிய விபரங்கள் மற்றும் குடும்ப விபரங்களை கூறி, மோமோ சேலஞ்ச் ஒத்துக்கொண்டு அந்தரங்க படங்களை அனுப்பாவிட்டால் அவர்களது செல்போனில் உள்ள விபரங்கள் மற்றும் படங்களை மெபைல் போன் காண்டக்ட்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று பயமுறுத்தபட்டுள்ளனர்.
பின்னர் இது குறித்து தீவிர விசாரனை செய்தும், அந்த எண் குறித்து கண்டறிந்ததில் இளைஞர்களின் நண்பரகளே இதனை செய்தது கண்டறியப்பட்டது. விளைவுகளை உணராமல் அவர்கள் செய்த காரியம் அந்த இளைஞர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியது. அவர்களுக்கு அறிவுரை கூறி, கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
இளைஞர்கள், மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விளையாட்டு விபரீதமானால் காவல்துறை விசாரணை , வழக்கு , சிறை என வாழ்க்கையே பாதிக்க படக்கூடும்.
மோமோ சேலஞ்ச் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை புகார் ஏதுமில்லை. எனவே அவ்வாறு யாரேனும் மெசேஜ் வரபெற்றால் அருகிலுள்ள காவல்நிலையத்தை அல்லது காவல் கட்டுபாட்டு அறையை அணுகவும். தமிழக காவல்துறை உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்றார்.



