கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இந்து தீவிரவாதி பேச்சு தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அரவக்குறிச்சி பிரச்சாரத்தின்போது கோட்சே குறித்துப் பேசியிருந்தார் கமல்ஹாசன். இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்! போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் கமல் கைது செய்யப்படுவாரா என்று பெரும் பரபரப்பு நிலவுகிறது!
இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியான பத்திரிகை செய்தியில்
நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் அரவக்குறிச்சி அண்ணாநகர் சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போது காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக உரையாற்றினார்
இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மற்றும் மதம் இனம் மொழி சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.. என்று குறிப்பிடப் பட்டுள்ளது.




