தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் நியமிக்க கோரிய வழக்கு தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு.
தமிழகத்தில் ரயில் நிலைய அலுவலர், லோகோ பைலட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் மணவாளன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் மதுரை கள்ளிக்குடி–திருமங்கலம் ரயில் பாதையில் கடந்த 8ஆம் தேதி எதிர் எதிரே ரயில்கள் வந்தன கடைசி நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் ரயில் நிர்வாகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளது.
பொதுவாக ரயில்வே ஊழியா்களுக்கான தோ்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழியிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ் உள்பட பிராந்திய மொழி மட்டுமே தெரிந்தவர்கள் திறமையிருந்தும் வெற்றிபெற முடியாத சூழல் உள்ளது.
இந்தியில் தேர்வ நடைபெறுவதால் வட மாநிலத்தவா்கள் அதிக அளவில் தோ்வாகின்றனா். தமிழகத்தில் ரயில்வே பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள்
ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலைய அலுவலர், லோகோ பைலட், கார்டுகள், பாயின்ட்மேன் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களிடையே அடிக்கடி தகவல் பரிமாற்றம் நடைபெறும். அப்படியிருக்கும் போது இப்பணிகளில் இருப்பவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழி தெரிந்தவா்களாக இருக்க வேண்டும்
ஆனால் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியவில்லை கள்ளிக்குடி–திருமங்கலம் ரயில் பாதையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் ஒரே சமயத்தில் எதிர் எதிரே வந்ததற்கு பணியாளா்களுக்கிடையே இருந்த மொழிப் பிரச்சனை காரணமாக சொல்லப்படுகிறது.
எனவே தமிழகத்தில் ரயில் நிலைய அலுவலா், லோகோ பைலட், கார்டுகள், பாயின்ட்மேன் போன்ற பணியிடங்களில் தமிழ் நன்கு தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சார்பில் வழக்கறிஞல் கணபதிசுப்பிரமணியன் வாதிட்டார். மனு தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜீன் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தார்.




