போதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது ஆஸிட் வீச்சு 8 பேர் படுகாயம்; ஒருவர் கைது….!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

criam 1 - 2026

கோயம்பேட்டில் குடிபோதையில் ரகளை செய்து, மனைவியை தாக்கிய 8 பேர் மீது திராவகம் வீசியதாக நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு, நெற்குன்றம், முனியப்பா நகர், 3-வது தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் கன்னியப்பன் (வயது 33). இவர் அங்குள்ள வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி.

இதே வீட்டின் 2-வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அழகுமுத்து (38), கருப்பசாமி(32), வாஞ்சிநாதன்(18), வீரமணி(21), எஸ்.வேல்முருகன்(23), பொ.வேல்முருகன்(24), ப.வேல்முருகன் (25), அசோக் (19) ஆகிய 8 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி, ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர் ஆகியோர் சென்று ஏன் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? என தட்டிக்கேட்டுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்து போதை கும்பல் மற்றும் கன்னியப்பன் தரப்பிற்கும் வாய்தகாறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 8 பேரும் சேர்ந்து கன்னியப்பன் உள்ளிட்ட 3 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் வீட்டில் வைத்திருந்த வெள்ளிப்பொருட்களை பாலிஷ் செய்யும் திராவகத்தை எடுத்து வந்து 8 பேர் மீதும் வீசியுள்ளார்.

திராவகம் உடலில் பட்டவுடன் 8 பேரின் உடலும் வெந்து போனது. இதையடுத்து 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே 8 பேரும் தாக்கியதில் ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் மீது திராவகம் வீசியதாக கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.