கேரளவுக்காக இயக்கப்படும் ரயில்களை பராமரித்து கழுவும் கக்கூஸ் ஆக தமிழக ரயில் நிலையங்கள்…. தமிழகத்தில் உள்ள ரயில் இருப்புபாதை தடங்களில் ஓசூர் – சேலம் வழித்தடம் தவிர மற்ற அனைத்து வழித்தடங்களும் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய கோட்டங்கள் தமிழகத்தில் உள்ளது. இது தவிர தமிழகத்தில் உள்ள இருப்புபாதைகளில் ஒரு சில பகுதிகள் கேரளாவில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களில் கீழ் அமைந்துள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் மொத்தம் 3846 கி.மீ தூரம் இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அந்த ரயில் குறிப்பிட்ட அளவு கி.மீ தூரம் இயக்கப்பட்டதும் பராமரிப்புக்கு என தனியாக கட்டப்பட்டுள்ள பிட்லைன் என்று சொல்லப்படும் ரயில்வே தண்டவாளத்தின் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு பாராமரிப்பதற்கு என ரயில்வே வாரியம் தனியாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில் ரயில்கள் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பல்வேறு ரயில்நிலையங்களில் உள்ள பிட்லைனில் வைத்து ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ஈரோடு, ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் ரயில்களை பராமரிக்கும் பிட்லைன் பனிமனைகள் உள்ளது. தமிழகத்துக்கு என ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் எல்லாம் இந்த ரயில் நிலையங்களிலிருந்து அதிக அளவில் புறப்படும் படியாகவே அறிவிக்கப்படும். ஏனென்றால் ரயில்கள் எல்லாம் இதில் உள்ள எதாவது ஒரு பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தெற்கு ரயில்வேயின் கீழ் கேரளாவில் திருவனந்தபுரம், ஷொர்ணூர், பாலக்காடு, கொச்சுவேலி, ஆலப்புளா, எர்ணாகுளம் ஆகிய இடங்களிலும் கர்நாடகவில் உள்ள மங்களுரிலும் பிட்லைன் பனிமனைகள் மூலமாக ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு ஓவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்டிஜெட்டில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்படும் சொற்ப புதிய ரயில் வழித்தடங்களில் ஒன்றிரண்டாவது தமிழகத்திற்குள் (கோவை, நெல்லை மற்றும் குமரி) நுழைகிற நிலையில்தான் ரயில்கள் இருக்கும் உண்மையில் அத்தகைய ஒரு ரயிலுக்கு தமிழக மக்கள் கோரிக்கை வைத்திருக்வே மாட்டார்கள். ஆனாலும் அழையா விருந்தாளியாக பெரும்பாலும் நள்ளிரவு வேளைகளில் தமிழகத்திற்குள் தலையைக் காட்டிவிட்டு மறுநாள் நள்ளிரவில் இங்கிருந்து இந்த ரயில்கள் விடப்படும் விதத்தில் கால அட்டவணை நிர்ணயித்திருக்கும். இது முழுக்க முழுக்க பராமரிப்பு பணிகளுக்காகவே வேண்டி தமிழகத்திலிருந்து புறப்படுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இணைக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் ஒரு தினசரி ரயில் கூட கேரளாவில் பராமரிக்கப்படுவது இல்லை. இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும், கர்நாடகாவில் உள்ள மங்களுரிலும் பராமரிக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு:- தமிழகத்தில் ரயில் பராமரிப்பில் அதிக பிட்லைன்கள் சென்னையில்தான உள்ளது. இந்த காரணத்தினால்தான் மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னையிலிருந்து அதிக ரயில்கள் அறிவித்து இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கேரளாவுக்கு என பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வளவு ரயில்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து அதே மாநிலத்துக்கு உட்ப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூட இயக்கப்படவில்லை. இவ்வாறு கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் சென்னையில் உள்ள பிட்லைன்களில் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அவைகளான திருவனந்தபுரம் – சென்னை மெயில், திருவனந்தபுரம் – சென்னை சூப்பர்பாஸ்டு, ஆலப்புழா – சென்னை தினசரி ரயில், திருவனந்தபுரம் – சென்னை முழுவதும் குளிர்சாதன ரயில், சென்னை – மங்களுர், சென்னை எழும்பூர் – குருவாயூர், சென்னை எழும்பூர் – மங்களுர், எர்ணாகுளம் – காரைக்கால் ரயில் ஆகிய ரயில்கள் ஆகும். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற பல்வேறு ரயில் நிலையங்களிலும் இது போன்ற பல்வேறு ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. இதைப்போல் திருநெல்வேலியில் திருநெல்வேலி – பிலாஸ்பூர், திருநெல்வேலி – ஹாப்பா ஆகிய ரயில்களும் ராமேஸ்வரத்தில் திருவனந்தபுரம் – சென்னை அனந்தபுரி ரயிலும், நாகர்கோவிலில் நாகர்கோவில் – ஷாலிமர், நாகர்கோவில் – காந்திதாம் , கன்னியாகுமரி – திப்ருகர், கன்னியாகுமரி – மும்பை தினசரி, கன்னியாகுமரி – ஜம்முதாவி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் விழுப்புரத்தில் மங்களுர் – புதுச்சேரி இரு ரயில்கள் என பல்வேறு ரயில் ஆகிய ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் ரயில்கள் பராமரிப்பு இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு பயணிகள் ரயில்களும் பராமரிக்கப்படுகிறது. இதில் அதிமான ரயில்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிக்கப்படுகிறது. அவைகளான நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில்கள் அனைத்தும், திருவனந்தபுரம் – கொல்லம் பயணிகள் ரயில், கொல்லம் – புனலூர் பயணிகள் ரயில்கள் அனைத்தும், கொல்லம் – ஆலப்புழா பயணிகள் ரயில், ஆலப்புழா – எர்ணாகுளம் பயணிகள் ரயில், நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் ரயில், நாகர்கோவில் – கோட்டையம் பயணிகள் ரயில், கோட்டையம் – எர்ணாகுளம் பயணிகள் ரயில், எர்ணாகுளம் -நிலாம்பூர் பயணிகள் ரயில், கோட்டையம் – கொல்லம் பயணிகள் ரயில், கோயம்பத்தூர் – மங்களுர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் நாகர்கோவில் பராமரிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளாக தூத்துக்குடியில் கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயிலும், மதுரையில் மதுரை – புனலூர் பயணிகள் ரயிலும் பராமரிக்கப்படுகிறது. பரிதாப நிலையில் மங்களுர் தமிழகத்தில் இவ்வளவு ரயில் பராமரித்து இயக்கும் போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களுர் ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. இந்த மங்களுர் ரயில் நிலையத்தில் பராமரித்து கேரளா பயணிகளுக்கு வேண்டி திருவனந்தபுரம் – மங்களுர், திருவனந்தபுரம் – மங்களுர் மாவேலி ரயில், நாகர்கோவில் – மங்களுர் பரசுராம் ரயில், நாகர்கோவில் – மங்களுர் ஏரநாடு ரயில், மங்களுர் – சென்னை, மங்களுர் – சென்னை வெஸ்டு கோஸ்டு, மங்களுர் – கோவை இன்டர்சிட்டி, மங்களுர் – ஜம்முதாவி ஆகிய தினசரி ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. கேரளாவில் பராமரிப்பு செய்து தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்கள் கேரளாவில் பராமரிக்கப்பட்டு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களான ஒருசில ரயில்கள் இருக்கின்றன. இதில கொல்லம் – கன்னியாகுமரி மெமு ரயில், ஷொர்ணூர் – கோவை பயணிகள் ரயில், பாலக்காடு – கோவை, ஈரோடு – கோவை, கோவை – சேலம் பயணிகள் ரயில்கள் ஆகும். இதில் கொல்லம் -கன்னியாகுமரி மெமு ரயில் 92 கி.மீ கேரளாவிலும் 51 கி.மீ தமிழகத்திலும் இயங்குகிறது. ஷொர்ணூர் – கோவை பயணிகள் ரயில் 75 கி.மீ கேரளாவிலும், 21 கி.மீ தமிழகத்திலும் பயணக்கிறது. இந்த ரயில்களும் கேரளாவை சார்ந்த பயணிகள் தமிழகத்துக்கு வந்து செல்வதற்காக வேண்டியே இயக்கப்படுகிறது. தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புகள் கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிக்காமல் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக அளவு பராமரிப்பதால் இங்கு உள்ள பிட்லைன்கள் எப்போதும் பராமாரிப்பு பணிகளுக்கு வேண்டி நிரம்பி வழியும். இவ்வாறு இருப்பதால் தமிழக பயணிகளுக்கு பயன்படுமாறு புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழக பயணிகள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ரயில்வேத்துறை இந்த கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு ரயில்கள் இயக்க தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள் அதாவது பிட்லைன்கள் மற்றும் ஸ்டேபளிங் லைன்கள் இல்லாததே ஓர் முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு கேரளா ரயில்களை இங்கு பராமரிப்பதால் தமிழக பயணிகள் பயன்படும் படியாக புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்க முடியாது. இது தமிழக பயணிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தண்ணீர் பிரச்சனை:- சென்னையில் கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில் தினசரி ரயில் பெட்டிகள் பராமரித்து சுத்தம் செய்யப்படுகிறது. ஒரு ரயில் பெட்டியை முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்வதற்கு சுமார் 2000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இது மட்டுமில்லாமல் ஒரு ரயில் பெட்டிக்கு பயணிகள் பயணம் இரண்டு தண்ணீர் நிரப்பும் கொல்கலன்களில் 1600 லிட்டர் தண்ணீர் வீதம் நிரப்பபடுகிறது. 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று கணக்கீட்டு பார்த்தால் அதுவே பெரிய அளவில் தேவைப்படுகிறது. இவ்வாறு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் பிடிப்பதற்கும் அதிக அளவில் தண்ணீர் தேவைபடும். தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தண்ணீர் சென்னை மெட்ரோ மூலமாக லாறிகளில் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில்வேத்துறைக்கு ரயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்கு அதிக அளவு தண்ணீர் வினியோகிப்பதால் சென்னையில் உள்ள சதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையாக தண்ணீர் வினியோகிக்க முடியாமல் உள்ளது. இந்த ரயில்களை தண்ணீர் அதிகம் உள்ள கேரளாவில் பராமரித்தால் கேராளாவில் தண்ணீர் வளம் குறைந்துவிடும் என்று கேரளா அதிகாரிகள் அங்கு ரயில்களை பராமரிக்க முயற்சி மேற்கொள்வது இல்லை. தமிழக ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லை: தமிழகத்தில் பராமரித்து கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லாமல் கேரளாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லுமாறு இயக்கப்படுகிறது. ஏனென்றால் தமிழக ரயில் நிலையங்களில் நின்று சென்றுவிட்டால் தமிழக பயணிகள் பயணம் செய்துவிடுவார்கள். இவ்வாறு தமிழக பயணிகள் பயணம் செய்தால் கேரளா மாநிலத்தவருக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்துக்காக வேண்டியே குறுகிய மனபான்மையுடன் நிறுத்தம் மறுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலே பராமரிக்கப்பட்டு தமிழக பயணிகளுக்கு பயன்படாமல் இவ்வாறு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் நீட்டிப்பு செய்ய மறுப்பு: கேரளாவில் பராமரிக்கப்பட்டு கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு நீட்டிப்பு செய்து தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்யலாம் என்று என்று கோரிக்கை வைத்தால் கூட அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஏனென்றால் இந்த ரயில்கள் குறைந்த பயணம் தூரம் வழியாக மும்பை செல்வதால் தமிழக பயணிகள் பயணம் செய்துவிடுவார்கள். இவ்வாறு தமிழக பயணிகள் பயணம் செய்வதால் செய்வதால் கேரளா மாநிலத்தவருக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்றும் இந்த ரயில்கள் தமிழக பயணிகளுக்கும் பயன்படும் படியாகவும் அமையும் என்ற காரணத்தால் எந்த ஒரு ரயிலையும் நீட்டிப்பு செய்ய அவர்கள் விரும்புவது இல்லை. கேரளாவுக்கு சாதகம் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இயக்கப்படும் ரயில்களை தமிழகத்தில் பராமரிப்புதால் அவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இன்றி புதிய ரயில்கள் சேவை கிடைத்துவிடும். அவர்கள் அங்கு உள்ள ரயில் நிலையத்தில் வைத்து எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்ய வேண்டாம். காலையில் கேரளாவுக்கு வந்து சேரும் ரயில் பெட்டிகளை மாலைவரை காலியாக நிறுத்திவைத்து விட்டு மாலையில் புறப்பட்டு தமிழக ரயில் நிலையங்களுக்கு வந்துவிட்டு இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அங்கு உள்ள பிட்லைன்கனை பயன்படுத்தி 100 சதமானம் கேரளா மாநிலத்தவரின் பயன்படும் படியாக உள்ள ரயில்களை அதிக அளவில் இயக்குகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து மங்களுர், கோவா வழியாக வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கேரளா மாநிலத்தவர் மட்டுமே பயன்படுத்தும் ரயில்கள் ஆகும். இவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நீட்டிக்கப்பட்ட ரயில்கள்: சென்னையிலிருந்து பல்வேறு நெடுந்தூர ரயில்கள் ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் எல்லாம் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிக்கப்படுகிறது. இது போன்ற ரயில்கள் கோவை, ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுவதால் இந்த பகுதிகளில் உள்ள தமிழக பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் இதிலும் இந்த பகுதி பயணிகள் அதிக அளவில் பயணம் செய்துவிட கூடாது என்ற காரணத்துக்காக இந்த தடத்தில் பயணிக்கும் அனைத்து நெடுந்தூர ரயில்களுக்கும் முன்பதிவு இடஒதுக்கீடு மிகமிக குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிட்லைன் இடநெருக்கடி தற்போது கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களை அதிக அளவில் தமிழகத்தில் பராமரிப்பதால் இங்கு உள்ள ரயில் நிலையங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் இடநெருக்கடியாக உள்ளது. பிட்லைன்களில் இனிமேல் எந்த ஒரு புதிய ரயிலும் பராமரிப்பு பணிக்கு என சேர்க்க முடியாத நிலை உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மட்டும் ஒருசில புதிய ரயில்கள் பராமரிப்பு செய்ய முடியும் என்ற அளவிற்கு பிட்லைன்களில் காலி இடம் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் எந்த ஒரு புதிய ரயிலும் இயக்க முடியாதநிலை ஏற்படும். கிடப்பில் புதிய பிட்லைன்கள் அமைக்கும் திட்டம் தமிழகத்தில் அதிக ரயில் இயக்க வேண்டும் என்ற காரணத்தில் சென்னையில் தாம்பரத்தில் புதிதாக பிட்லைன்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. இது தவிர கடந்த 2014 ரயில் பட்ஜெட்டில் ராயபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் புதிதாக முனையவசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை:- ஓவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய வழித்தடங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு வைக்கப்படும் கோரிக்கைளின் அடிப்படையில் ரயில்வேத்துறை திட்ட கருத்துரு தயார் செய்யும். ஓவ்வொரு ஆண்டும் இவ்வாறு திட்ட கருத்துரு தயார் செய்துவிட்டு பின்னர் ரயில்பெட்டிகள் பராமரிப்பு என்று வரும் போது பிட்லைன்களில் பராமரிக்க போதிய இடம் இல்லாத காரணத்தால் இது போன்ற பல்வேறு நல்ல திட்டகருத்துருக்கள் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளாவுக்கு புதிய ரயில்கள்: ஒவ்வொரு ஆண்டும் ரயில்பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கேரளாவுக்கு கணிசமான அளவில் ரயில்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கே முன்பே நெருக்கடி நிலையை எட்டியது. ஆனாலும் பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவித்து கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு அறிவிப்பின் சூட்சமம் தெரியாமல் தமிழக பயணிகள் உள்ளனர். திருவனந்தபுரத்துக்கு ஓர் புதிய ரயில் அறிவிக்கப்பட்டால் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஓர் பழைய ரயில் தமிழகத்துக்கு பராமரிப்புக்கு என அனுப்பபடும். இவ்வாறு அனுப்ப முடியாத பட்சமாக இருந்தால் தமிழகத்துக்கு ரயில் நீட்டிப்பு என்ற பெயரில் அறிவித்துவிட்டு இங்கு பராமரிக்கப்படும் படியாக செய்து விடுவார்கள். கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்களை அங்கே பராமரிக்கப்பட கோரிக்கை: இது குறித்து தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ரயில்வே அமைச்சரை முறையீட்டு தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே இயக்கப்படும் ரயில்களில் பகுதி ரயில்கள் கண்டிப்பாக கேரளாவில் பராமரிக்கப்பட வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பராமரிப்பு செய்யப்படும் ரயில்களை கேரளாவில் உள்ள ரயில் நிலயங்களுக்கு பராமரிப்பை மாற்றிவிட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேளி ஆகிய இடங்களில் தற்போது பராமரிக்கப்பட்டுவரும் கொங்கன்பாதை ரயில்களை இங்கு நீட்டிப்பு செய்து தமிழகத்தில் பராமரிக்கலாம். இவ்வாறு ரயில்களை நீட்டிப்பு செய்து பிட்லைன் பராமரிப்பை மாற்றி இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். புதிதாக அதிக அளவில் பிட்லைன்கள் அமைக்க கோரிக்கை:- தமிழகத்தில் தற்போது பிட்லைன்கள் உள்ள அனைத்து ரயில்நிலையங்களையும் விரிவாக்கம் செய்து கூடுதல் பிட்லைன்கள் அமைக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் டெல்டா மாவட்ட பகுதிகளில் தற்போது பிட்லைன் வசதி எந்த ஒரு ரயில்நிலையத்திலும் இல்லை. ஆகவே அந்த பகுதியில் புதிதாகபிட்லைன் வசதி ஏற்படுத்தபட வேண்டும்.
கட்டுரை: பி. எட்வர்ட் ஜெனி
(கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலர்) email: [email protected]